Wednesday, 26 October 2011

எப்படிப் பாடவேண்டும் ?எம்.எம்.தண்டபாணி தேசிகர்

திரு, தண்டபாணி தேசிகர் அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் இசை நிகழ்ச்சிகளில் தமிழ் பாடல்களையும் தேவார திருமுறைகளையும் பாடி தமிழிசை வளர்த்த இசையரசராவார் .அண்ணாமலை அரசர் ஏற்படுத்திய தமிழிசை இயக்கத்திற்கு தமது பாடல்கள் மூலம் ஏற்றம் தந்தவர்.

இவர் இனிமை ததும்பும் பல தமிழ் பாடல்களை இயற்றி தமிழிசைக்கு வளம் சேர்த்துள்ளார்.தமது பாடல்களில் தமிழிசைப் பற்றியும் , இசை இலக்கனங்களையும்,சமூக பொதுக் கருத்துகளையும் பாடி உள்ளார்.                            

எப்படி பாட வேண்டும்?

தேசிகர் அவர்கள் " பாட வேண்டுமே" என்ற தமது பாடலில் பாடும் முறைமையை எளிய தமிழில் எடுத்துரைக்கிறார். இந்த பாடலை இனிமையான அம்சநாத ராகத்தில் அனைவரும் ரசிக்கும்படி  இசையமைத்துள்ளார். அப்பாடல் வருமாறு,

ராகம்: அம்சனாதம் 
தாளம்: ரூபகம் 

                                                    பல்லவி 

                                  பாட வேண்டுமே இசை 
                                  பாட வேண்டுமே இசைப் 
                                  பாவின் பொருளை நன்குணர்ந்து 

                                            அனுப்பல்லவி 

                            ஆடுங் கூத்தன் அடியை நினைந்து 
                            அன்பினால் அகம் கனிந்து கனிந்து 
                                                                                            (பாட வேண்டுமே )

                                                   சரணம் 

                           குழலும் யாழும் ஒன்றாய் கூட்டி 
                           குரலையதனுள் நன்றாய் ஏற்றி 

                          முழவின் துணையால் தாளங்காட்டி 
                           மூன்று தமிழின் முறையை நாட்டி 
                                                                                        (பாட வேண்டுமே 
பாடலின் விளக்கம் ,
பாடும் பாடலின் பொருளை நன்கு உணர்ந்து பாட வேண்டும் .மனதில் எப்பொழுதும் பக்தியுடனும் அன்புடனும் பாட வேண்டும். 
பாடும்பொழுது சுருதியில் விலகாமல் தாளத்துடன் பாடல் வரிகளை இயல்,இசை,பாவம்,மூன்றும் விளங்குமாறு பாடவேண்டும் .என அழகாக எடுத்துரைக்கிறார்.
இந்தப் பாடலை தண்டபாணி தேசிகர் அவர்களின் தெளிந்த தேன் குரலில் கேட்க, சுட்டி 

கருணாமிர்த சாகரம்

                                      கருணாமிர்த சாகரம் -ஆபிரகாம் பண்டிதர் 

திரு, ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் தனது ''கருணாமிர்த சாகரம் '' ஆய்வு நூலின் மூலம் இந்திய இசை அனைத்திற்கும் தமிழிசையே அடிப்படை என நிரூபித்த முன்னோடி ஆய்வாளர் ஆவர் .

தனது வாழ்நாளின் பெரும்பகுதியை தமிழிசை ஆய்விற்காக செலவிட்டும்,              7 தமிழிசை மாநாடுகளை நடத்தியும் தமிழிசை வளர்ச்சிக்காக அரும்பாடுப்பட்டவர் .
 பண்டிதர் எழுதிய இந்த நூலை தஞ்சை இணையப் பல்கலை வழியாகப் படிக்க shttp://www.tamilvu.org/library/l9800/html/l9800ind.htm

Tuesday, 4 October 2011

காந்தியைப் பற்றிய தமிழிசைப் பாடல்

கர்னாடக இசையின் உள்ளடக்கத்தில் சமகாலத்திற்கு ஏற்ற மாற்றங்கள் ஏற்றப்பட வில்லை என சிலர் குறைப்படுகிறார்கள். 20 நூறாண்டின் ஆரம்பம் வரை தமிழ்ப்பாடல்கள் மற்றும் மாற்ற மொழிப் பாடல்கள் ஆன்மிக உள்ளடக்கத்தை கொண்டிருந்தது உண்மைதான்.

 ஆனால் தமிழிசை இயக்கம் தோன்றியப் பிறகு தனிமனித ஒழுக்கம்  , குடும்ப ஒழுக்கம், நாட்டின் சிறப்பு,ஊரின் சிறப்பு, தலைவர்களின் சிறப்பு என பொது உள்ளடக்கங்களில் பல தமிழ்ப்பாடல்கள் தமிழிசைஅறிஞர் பலரால் இயற்றப்பட்டுள்ளது.
  அத்தகைய தமிழிசை அறிஞர்களில் பலரது பாடல் தொகுப்புகள் மறுபதிப்பு அடையாமலும் , அப்பாடல்கள் பாடப்படாமலும் ,அவர்களது பெயர்க் கூட யாவரும் அறியாத நிலையில் இருப்பது தமிழ் நாட்டின் அவல நிலையாகும்.

  இனிவரும் காலங்களிலாவது பல தமிழ்ப் பாடல் தொகுப்புகள் கண்டறிந்து மறுபதிப்பு செய்யப்பட்டு அவை இசைக்கலைஞர்களால் பாடப்பட்டு தமிழிசை எங்கும் முழங்க வேண்டும் என உறுதி கொள்வோம்.
அந்த வகையில் "சேர்வோம் ஒன்றாய்" என்ற பொருளில்  காந்தியைப்பற்றி திரு. நாடாதூர் நம்பி அவர்கள் எழுதிய தமிழ்ப் பாடலை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இங்கு சமர்ப்பிக்கிறேன்.

                                
                                                     
                                                                             " சேர்வோம் ஒன்றாய் "
 ராகம் : இந்தோளம்  

                                                                       பல்லவி 
                 
                                            அண்ணலின் சொல் நினைப்போம்! - அவர் 
                                            அறிய வழி நடப்போம்! -நாம் 
                                                                                                             (அண்ணலின்)
                       
                                                                அனுப்பல்லவி 
          
                                           எண்ணத்தில் ஒன்றிடுவோம் - நல்ல 
                                           எண்ணத்தால் ஒன்றிடுவோம் -நாம்
                                           எந்நாளும் ஒன்றிடுவோம் ! - இங்கு 
                                           எல்லாரும் அன்புகொண்டே ! -நாம் 
                                                                                                              (அண்ணலின் )

                                                                     சரணம் 

                                           உணர்வினில் அனைவருமே - நாம்
                                           ஒன்றென்ற உண்மையை மறுப்பர் உண்டோ ?
                                           மனத்தினால் உயர்ந்தவரே! - நல்ல 
                                           மனிதராம் அவரையே மதித்திடுவோம் !
                                                                                                               (அண்ணலின் )

                                           உள்ளத்தால் உயர்ந்திடுவோம் - என்றும் 
                                           உழைப்பினால் உயர்ந்திடுவோம் !
                                           கள்ளத்தை நீக்கிடுவோம் ! இந்த 
                                           கர்சினி வியந்திட சேர்ந்திடுவோம் ! - நாம் 
                                                                                                              (அண்ணலின் ) 
       
  திரு நாடதூர் நம்பி எனும் எஸ்.வி. வரததேசிகன் மகாகவி பாரதியாரின்        நண்பரும்,வடமொழி மற்றும் தென்மொழி புலவரும் மறைநெறித் திருவினருமான நாடாதூர் வரகவி வேங்கடன் அவர்களின் மகன் ஆவார்.
இவர் நல்ல கவிஞர் , நடிகர், நாடக ஆசிரியர் , நாடத் தயாரிப்பாளர், கலைஞர் ஆவார். புதுவை வானொலில் 'Α' கிரேடு கலைஞர் ,புதுவு விடுதலைப் போராட்டத்தில் ஈடுப்பட்ட தியாகியும் ஆவார். 

 இவர் "இசைத்தமிழ்" எனும் நூலை 1988 ல் வெளியிட்டு உள்ளார். இதில் பல இனிமையான தமிழ்ப் பாடல்களும் புதுவைப் பற்றிய தமிழ்ப் பாடலையும் இயற்றியுள்ளார்.