Wednesday, 4 February 2015

   நிலம், நீர், ,காற்று ,ஒளியைப் போல் இசையும் இயற்கையின் சக்தியாகும். இசையை மனிதன் தோற்றுவிக்கவில்லை. அதற்கு இலக்கணம் வகுத்து உருவமே தந்துள்ளான். இன்று கர்னாடக இசை என அழைக்கப்படும் இசை வடிவமானது, வடக்கே தோன்றியது எனவும் , தெற்கே பண்டைய தமிழ்நாட்டில் தோன்றியது எனவும் பலவிவாதங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 

   கர்னாடக இசைக்கு உயிரானது ராகமே ஆகும்.அந்த ராக இசைக்கான இலக்கணங்களே தொல்காப்பியத்திலும், சிலப்பதிகாரத்திலும், இலக்கியங்களிலும் உள்ளதாகும். வேற எந்த மொழியிலும் இத்தகைய பழமையானராகஇலக்கணங்கள்கூறும்நூல்கள் இல்லை.மற்றவையெல்லாம் பின்னால் தோன்றியவையே .மொழியை அடிப்படையாகக் கொண்ட கீர்த்தனைப் போன்ற இசைவடிவங்கள் நானுறு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய வளர்ச்சி நிலையாகும்.எனவே தெலுங்கில் கீர்த்தனைகள் பாடுவதால் வேற்று மொழி இசை ஆகிவிட முடியாது.அப்படி பார்க்கப் போனால் வேற்று மொழி கீர்த்தனைகளுக்கு முன்னோடியாக தமிழ் மூவரின் கீர்த்தனைகளே தோன்றியுள்ளது.
எனவே கர்னாட இசையானது தமிழிசை என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் நம்மிடம் உள்ளது. அதைவிட மிகவும் பழமையான அழிந்து போனதாக கருதப்பட்ட உரையாசிரியர்கள் பயன்படுத்திய  இசைநூலான பஞ்சமரபு கிடைத்துள்ளது. இதை ஆபிரகாம் பண்டிதர், விபுலானந்தர், வி.ப.க.போன்ற அறிஞர்கள் ஆய்வு செய்து தமிழிசையை நிருபித்துள்ளார்கள். இதனால் தமிழிசை இலக்கியங்களும், இலக்கணங்களும்  ஓரளவு தன்னிறைவு அடைந்துள்ளது. அதுபோல் இருபதாம் நுற்றாண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்ட தமிழிசை இயக்கத்தின் காரணமாக பல தமிழ் கீர்த்தனைகளும் இன்று நம்மிடம் உள்ளது.
       ஆனாலும் தமிழிசை வளர்ந்துள்ளதா?.... என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
 தமிழன் வகுத்த இசை தமிழனால் சுவைக்கப் படுகிறதா? என்பது சிந்திக்க வேண்டியதாகும்.
 கர்னாடக இசை எங்கிருந்து தோன்றியது என்பதை மட்டும் இன்னும் நாம் விவாதம் செய்து கொண்டிருந்தால் முடிவில் அதன் இழப்பே இரு தரப்பினர்க்கும் மிஞ்சும். கர்னாடக இசை இன்று ஒரு பொதுத் தன்மையை பெற்றுள்ளது. அதை குறிப்பிடட்ட ஒரு எல்லையில் கட்டுப்படுத்த முடியாது. அது எங்கும் விரவி நிற்கிறது.எனவே மற்ற  மொழி கீர்த்தனைகளும்  பாடப்படுவது அவசியமானதுமாகும். ஆனால் இன்று கர்னாடக இசை தமிழனிடமிருந்து விலகியே நிற்கிறது. இன்று பேசப்படும் தமிழிசை ஆய்வுகளும், இசை விமர்சனங்களும் எத்தனை தமிழர்க்கு தெரியும்? எல்லாம் ஒரு குறுகிய வட்டத்திலேயே நிற்கிறது.
 தமிழிசை வெறும் எழுத்தால் மட்டும் வாழ முடியாது.அது தமிழன் இருப்பிடம் எங்கும் நிகழ வேண்டும்.
இந்த இடைவெளிக்கு காரணம் சென்ற நூற்றாண்டின் மும்மூர்த்திகளின் பொற்காலமே ஆகும்.அது காலத்தின் கட்டாயம்.
இன்று தமிழ் கீர்த்தனைகள் கணிசமான அளவில் பாடப்படுகின்றன ஆனால் எங்கு பாடப்படுகின்றன? சபாக்கள் எனப்படும் வியாபாரக்கூடங்களில். 
   காலங்காலமாக நமது மரபிசை ஒலித்து வந்தது பண்பாட்டின் சின்னமான கோவில்களில்தான்.அதை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். தமிழகத்தின் கோவில்களில் தமிழ் பாடல்கள் பாடப்பட வேண்டும். ஆனால் இன்று  தமிழகக் கோவில்களில் மரபிசைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் திரையிசைப் பாடல்களும் ஆபாச கூத்துகளும் இடம் பெறுகின்றது.இனி வரும் காலங்களில் இந்த அவல நிலை மாறி கோவில்களில் பக்தியுடன் தமிழ்ப்பாடல்களும் அரங்கேறுமானால் தமிழிசை செழித்தோங்கும் !

No comments:

Post a Comment