Wednesday, 4 February 2015

   நிலம், நீர், ,காற்று ,ஒளியைப் போல் இசையும் இயற்கையின் சக்தியாகும். இசையை மனிதன் தோற்றுவிக்கவில்லை. அதற்கு இலக்கணம் வகுத்து உருவமே தந்துள்ளான். இன்று கர்னாடக இசை என அழைக்கப்படும் இசை வடிவமானது, வடக்கே தோன்றியது எனவும் , தெற்கே பண்டைய தமிழ்நாட்டில் தோன்றியது எனவும் பலவிவாதங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. 

   கர்னாடக இசைக்கு உயிரானது ராகமே ஆகும்.அந்த ராக இசைக்கான இலக்கணங்களே தொல்காப்பியத்திலும், சிலப்பதிகாரத்திலும், இலக்கியங்களிலும் உள்ளதாகும். வேற எந்த மொழியிலும் இத்தகைய பழமையானராகஇலக்கணங்கள்கூறும்நூல்கள் இல்லை.மற்றவையெல்லாம் பின்னால் தோன்றியவையே .மொழியை அடிப்படையாகக் கொண்ட கீர்த்தனைப் போன்ற இசைவடிவங்கள் நானுறு ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய வளர்ச்சி நிலையாகும்.எனவே தெலுங்கில் கீர்த்தனைகள் பாடுவதால் வேற்று மொழி இசை ஆகிவிட முடியாது.அப்படி பார்க்கப் போனால் வேற்று மொழி கீர்த்தனைகளுக்கு முன்னோடியாக தமிழ் மூவரின் கீர்த்தனைகளே தோன்றியுள்ளது.
எனவே கர்னாட இசையானது தமிழிசை என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் நம்மிடம் உள்ளது. அதைவிட மிகவும் பழமையான அழிந்து போனதாக கருதப்பட்ட உரையாசிரியர்கள் பயன்படுத்திய  இசைநூலான பஞ்சமரபு கிடைத்துள்ளது. இதை ஆபிரகாம் பண்டிதர், விபுலானந்தர், வி.ப.க.போன்ற அறிஞர்கள் ஆய்வு செய்து தமிழிசையை நிருபித்துள்ளார்கள். இதனால் தமிழிசை இலக்கியங்களும், இலக்கணங்களும்  ஓரளவு தன்னிறைவு அடைந்துள்ளது. அதுபோல் இருபதாம் நுற்றாண்டின் ஆரம்பத்தில் ஏற்பட்ட தமிழிசை இயக்கத்தின் காரணமாக பல தமிழ் கீர்த்தனைகளும் இன்று நம்மிடம் உள்ளது.
       ஆனாலும் தமிழிசை வளர்ந்துள்ளதா?.... என்பது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.
 தமிழன் வகுத்த இசை தமிழனால் சுவைக்கப் படுகிறதா? என்பது சிந்திக்க வேண்டியதாகும்.
 கர்னாடக இசை எங்கிருந்து தோன்றியது என்பதை மட்டும் இன்னும் நாம் விவாதம் செய்து கொண்டிருந்தால் முடிவில் அதன் இழப்பே இரு தரப்பினர்க்கும் மிஞ்சும். கர்னாடக இசை இன்று ஒரு பொதுத் தன்மையை பெற்றுள்ளது. அதை குறிப்பிடட்ட ஒரு எல்லையில் கட்டுப்படுத்த முடியாது. அது எங்கும் விரவி நிற்கிறது.எனவே மற்ற  மொழி கீர்த்தனைகளும்  பாடப்படுவது அவசியமானதுமாகும். ஆனால் இன்று கர்னாடக இசை தமிழனிடமிருந்து விலகியே நிற்கிறது. இன்று பேசப்படும் தமிழிசை ஆய்வுகளும், இசை விமர்சனங்களும் எத்தனை தமிழர்க்கு தெரியும்? எல்லாம் ஒரு குறுகிய வட்டத்திலேயே நிற்கிறது.
 தமிழிசை வெறும் எழுத்தால் மட்டும் வாழ முடியாது.அது தமிழன் இருப்பிடம் எங்கும் நிகழ வேண்டும்.
இந்த இடைவெளிக்கு காரணம் சென்ற நூற்றாண்டின் மும்மூர்த்திகளின் பொற்காலமே ஆகும்.அது காலத்தின் கட்டாயம்.
இன்று தமிழ் கீர்த்தனைகள் கணிசமான அளவில் பாடப்படுகின்றன ஆனால் எங்கு பாடப்படுகின்றன? சபாக்கள் எனப்படும் வியாபாரக்கூடங்களில். 
   காலங்காலமாக நமது மரபிசை ஒலித்து வந்தது பண்பாட்டின் சின்னமான கோவில்களில்தான்.அதை மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும். தமிழகத்தின் கோவில்களில் தமிழ் பாடல்கள் பாடப்பட வேண்டும். ஆனால் இன்று  தமிழகக் கோவில்களில் மரபிசைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் திரையிசைப் பாடல்களும் ஆபாச கூத்துகளும் இடம் பெறுகின்றது.இனி வரும் காலங்களில் இந்த அவல நிலை மாறி கோவில்களில் பக்தியுடன் தமிழ்ப்பாடல்களும் அரங்கேறுமானால் தமிழிசை செழித்தோங்கும் !

Tuesday, 29 April 2014

தமிழ்த் தொகுப்புகள்: தமிழிலக்கியங்களும் தமிழிசையும் - சோ. சிவசுப்பிரமணி...

தமிழ்த் தொகுப்புகள்: தமிழிலக்கியங்களும் தமிழிசையும் - சோ. சிவசுப்பிரமணி...: உலகின் தொன்மை வாய்ந்த மொழிகளில் செவ்வியல் மொழி என்னும் பெருமையுடன் வாழும் மொழி தமிழ்மொழி ஆகும். தமிழ் மொழியில் தொல்காப்பியம் தொடங்கி புதுக்க...

தமிழ்த் தொகுப்புகள்: வேருக்கு நீர் வார்த்தவர்கள் – 36 : தமிழ் இசை!

தமிழ்த் தொகுப்புகள்: வேருக்கு நீர் வார்த்தவர்கள் – 36 : தமிழ் இசை!:   ஜஸ்டிஸ் எஸ் . மகராஜன் தமிழ் இசை இயக்கம் ஒரு தலைசிறந்த குறிக்கோளோடு தொடங்கப்பெற்றது . அந்தக் குறிக்கோளை நிறைவேற்றுவதற்காகத்...

Wednesday, 26 October 2011

எப்படிப் பாடவேண்டும் ?எம்.எம்.தண்டபாணி தேசிகர்

திரு, தண்டபாணி தேசிகர் அவர்கள் தன் வாழ்நாள் முழுவதும் இசை நிகழ்ச்சிகளில் தமிழ் பாடல்களையும் தேவார திருமுறைகளையும் பாடி தமிழிசை வளர்த்த இசையரசராவார் .அண்ணாமலை அரசர் ஏற்படுத்திய தமிழிசை இயக்கத்திற்கு தமது பாடல்கள் மூலம் ஏற்றம் தந்தவர்.

இவர் இனிமை ததும்பும் பல தமிழ் பாடல்களை இயற்றி தமிழிசைக்கு வளம் சேர்த்துள்ளார்.தமது பாடல்களில் தமிழிசைப் பற்றியும் , இசை இலக்கனங்களையும்,சமூக பொதுக் கருத்துகளையும் பாடி உள்ளார்.                            

எப்படி பாட வேண்டும்?

தேசிகர் அவர்கள் " பாட வேண்டுமே" என்ற தமது பாடலில் பாடும் முறைமையை எளிய தமிழில் எடுத்துரைக்கிறார். இந்த பாடலை இனிமையான அம்சநாத ராகத்தில் அனைவரும் ரசிக்கும்படி  இசையமைத்துள்ளார். அப்பாடல் வருமாறு,

ராகம்: அம்சனாதம் 
தாளம்: ரூபகம் 

                                                    பல்லவி 

                                  பாட வேண்டுமே இசை 
                                  பாட வேண்டுமே இசைப் 
                                  பாவின் பொருளை நன்குணர்ந்து 

                                            அனுப்பல்லவி 

                            ஆடுங் கூத்தன் அடியை நினைந்து 
                            அன்பினால் அகம் கனிந்து கனிந்து 
                                                                                            (பாட வேண்டுமே )

                                                   சரணம் 

                           குழலும் யாழும் ஒன்றாய் கூட்டி 
                           குரலையதனுள் நன்றாய் ஏற்றி 

                          முழவின் துணையால் தாளங்காட்டி 
                           மூன்று தமிழின் முறையை நாட்டி 
                                                                                        (பாட வேண்டுமே 
பாடலின் விளக்கம் ,
பாடும் பாடலின் பொருளை நன்கு உணர்ந்து பாட வேண்டும் .மனதில் எப்பொழுதும் பக்தியுடனும் அன்புடனும் பாட வேண்டும். 
பாடும்பொழுது சுருதியில் விலகாமல் தாளத்துடன் பாடல் வரிகளை இயல்,இசை,பாவம்,மூன்றும் விளங்குமாறு பாடவேண்டும் .என அழகாக எடுத்துரைக்கிறார்.
இந்தப் பாடலை தண்டபாணி தேசிகர் அவர்களின் தெளிந்த தேன் குரலில் கேட்க, சுட்டி 

கருணாமிர்த சாகரம்

                                      கருணாமிர்த சாகரம் -ஆபிரகாம் பண்டிதர் 

திரு, ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் தனது ''கருணாமிர்த சாகரம் '' ஆய்வு நூலின் மூலம் இந்திய இசை அனைத்திற்கும் தமிழிசையே அடிப்படை என நிரூபித்த முன்னோடி ஆய்வாளர் ஆவர் .

தனது வாழ்நாளின் பெரும்பகுதியை தமிழிசை ஆய்விற்காக செலவிட்டும்,              7 தமிழிசை மாநாடுகளை நடத்தியும் தமிழிசை வளர்ச்சிக்காக அரும்பாடுப்பட்டவர் .
 பண்டிதர் எழுதிய இந்த நூலை தஞ்சை இணையப் பல்கலை வழியாகப் படிக்க shttp://www.tamilvu.org/library/l9800/html/l9800ind.htm

Tuesday, 4 October 2011

காந்தியைப் பற்றிய தமிழிசைப் பாடல்

கர்னாடக இசையின் உள்ளடக்கத்தில் சமகாலத்திற்கு ஏற்ற மாற்றங்கள் ஏற்றப்பட வில்லை என சிலர் குறைப்படுகிறார்கள். 20 நூறாண்டின் ஆரம்பம் வரை தமிழ்ப்பாடல்கள் மற்றும் மாற்ற மொழிப் பாடல்கள் ஆன்மிக உள்ளடக்கத்தை கொண்டிருந்தது உண்மைதான்.

 ஆனால் தமிழிசை இயக்கம் தோன்றியப் பிறகு தனிமனித ஒழுக்கம்  , குடும்ப ஒழுக்கம், நாட்டின் சிறப்பு,ஊரின் சிறப்பு, தலைவர்களின் சிறப்பு என பொது உள்ளடக்கங்களில் பல தமிழ்ப்பாடல்கள் தமிழிசைஅறிஞர் பலரால் இயற்றப்பட்டுள்ளது.
  அத்தகைய தமிழிசை அறிஞர்களில் பலரது பாடல் தொகுப்புகள் மறுபதிப்பு அடையாமலும் , அப்பாடல்கள் பாடப்படாமலும் ,அவர்களது பெயர்க் கூட யாவரும் அறியாத நிலையில் இருப்பது தமிழ் நாட்டின் அவல நிலையாகும்.

  இனிவரும் காலங்களிலாவது பல தமிழ்ப் பாடல் தொகுப்புகள் கண்டறிந்து மறுபதிப்பு செய்யப்பட்டு அவை இசைக்கலைஞர்களால் பாடப்பட்டு தமிழிசை எங்கும் முழங்க வேண்டும் என உறுதி கொள்வோம்.
அந்த வகையில் "சேர்வோம் ஒன்றாய்" என்ற பொருளில்  காந்தியைப்பற்றி திரு. நாடாதூர் நம்பி அவர்கள் எழுதிய தமிழ்ப் பாடலை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இங்கு சமர்ப்பிக்கிறேன்.

                                
                                                     
                                                                             " சேர்வோம் ஒன்றாய் "
 ராகம் : இந்தோளம்  

                                                                       பல்லவி 
                 
                                            அண்ணலின் சொல் நினைப்போம்! - அவர் 
                                            அறிய வழி நடப்போம்! -நாம் 
                                                                                                             (அண்ணலின்)
                       
                                                                அனுப்பல்லவி 
          
                                           எண்ணத்தில் ஒன்றிடுவோம் - நல்ல 
                                           எண்ணத்தால் ஒன்றிடுவோம் -நாம்
                                           எந்நாளும் ஒன்றிடுவோம் ! - இங்கு 
                                           எல்லாரும் அன்புகொண்டே ! -நாம் 
                                                                                                              (அண்ணலின் )

                                                                     சரணம் 

                                           உணர்வினில் அனைவருமே - நாம்
                                           ஒன்றென்ற உண்மையை மறுப்பர் உண்டோ ?
                                           மனத்தினால் உயர்ந்தவரே! - நல்ல 
                                           மனிதராம் அவரையே மதித்திடுவோம் !
                                                                                                               (அண்ணலின் )

                                           உள்ளத்தால் உயர்ந்திடுவோம் - என்றும் 
                                           உழைப்பினால் உயர்ந்திடுவோம் !
                                           கள்ளத்தை நீக்கிடுவோம் ! இந்த 
                                           கர்சினி வியந்திட சேர்ந்திடுவோம் ! - நாம் 
                                                                                                              (அண்ணலின் ) 
       
  திரு நாடதூர் நம்பி எனும் எஸ்.வி. வரததேசிகன் மகாகவி பாரதியாரின்        நண்பரும்,வடமொழி மற்றும் தென்மொழி புலவரும் மறைநெறித் திருவினருமான நாடாதூர் வரகவி வேங்கடன் அவர்களின் மகன் ஆவார்.
இவர் நல்ல கவிஞர் , நடிகர், நாடக ஆசிரியர் , நாடத் தயாரிப்பாளர், கலைஞர் ஆவார். புதுவை வானொலில் 'Α' கிரேடு கலைஞர் ,புதுவு விடுதலைப் போராட்டத்தில் ஈடுப்பட்ட தியாகியும் ஆவார். 

 இவர் "இசைத்தமிழ்" எனும் நூலை 1988 ல் வெளியிட்டு உள்ளார். இதில் பல இனிமையான தமிழ்ப் பாடல்களும் புதுவைப் பற்றிய தமிழ்ப் பாடலையும் இயற்றியுள்ளார்.

Saturday, 17 September 2011

தமிழிசை தந்தை பிறந்தநாள்



  தமிழிசை தந்தை ராஜா.சர்.அண்ணாமலை செட்டியார்( நவம்பர் 18 )

      இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழகமெங்கும் தெலுங்கிசை முழங்கிக் கொண்டிருந்தது. தமிழ் பாடல்களுக்கு இசை நிகழ்ச்சிகளில் இறுதி சில நிமிடங்களே ஒதுக்கப்பட்டது.இந்நிலை மாற தமிழ்ப்பாடல்கள் எங்கும் ஒலிக்க எழுந்த தன்மானத் தமிழரே வள்ளல் அண்ணாமலைச் செட்டியார் ஆவர். இருபதாம் நூற்றாண்டில் எழுந்த தமிழிசைப் புரட்சியின் பெரும் பங்கு இவரையே சாரும். தமிழிசை வளர்சிக்காக பெரும் பொருளுதவியும் , கல்லுரி மற்றும் மன்றங்களை அமைத்து தமிழிசை வளர்ச்சியை அனு அனுவாக உயர்த்தினார்.



     கி.பி.1929 ஆண்டு சிதம்பரத்தில் இசைக்கல்லுரியை தொடங்கி பின் அதை 1932 ல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துடன் இணைத்தார் . 16/11/1940 ல் நடைப்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவில் 1500 ரூபாய் நன்கொடையாக தமிழிசை வளர்சிக்காக வழங்கியுள்ளார் . மேலும் அப்பட்டமளிப்பு விழாவிலேயே பல்கலைக்கழக மாணவர்களுள் சிறப்பாக தமிழிசை பாடல்களை பாடுவருக்கு ஆண்டுதோறும் அளிக்கக் கூடிய பரிசுத்திட்டம் ஒன்றிற்கு 1000 ரூபாய் நன்கொடையாக வழங்கினார்கள் . 
   தமிழிசை வளர்சிக்காக முதன்முதலாக அண்ணாமலைநகரில் 14/08/1941 முதல் 17/08/1941 வரை மாநாடு சிறப்பாக நடைப்பெற்றது .
மேலும் தமிழ் இசைபாடல்களைப் புதியனவாக இயற்றுபவர்களுக்கும் பிறர் இயற்றியுள்ள தமிழ் இசை பாடல்களை முறையாகப் பாடுவர்களையும் ஊக்கம் ஊட்டுவதற்காக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இரண்டு பெரும் போட்டிகளை நடத்தி பரிசுகளையும் வழங்கியது . இப்போட்டிகளில் பரிசு பெற்றவர்களில்  தி.இலக்குமணபிள்ளை ,பாபநாசம் சிவன் ,கே.பொன்னையா பிள்ளை ,மாரியப்ப சுவாமிகள் ,கீழ்வேலூர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை முதலியோர் குறிப்பிடத்தவர்கள். மேலும் இப்போட்டிகளில் பாடப்பெற்ற பாடல்களில் சிறந்த 46 பாடல்கள் ,இசையமைப்போடு   பல்கலைகழகத்தால் வெளியிடப்பட்டன.  
மேலும் அண்ணாமலை அரசரின் 60 ஆண்டு நிறைவு விழாவில் தமிழிசை வளர்சிக்காக 15000 ரூபாய் நன்கொடையாக வழங்கினார்கள் .இந்நிதியை செலவிடுவதற்கு சில திட்டங்கள் வகுக்கப்பட்டன .
  1. தமிழிசை கழகங்களுக்கு பொருளுதவி செய்தல் .
  2. தமிழ் பாடல்களே பெரும்பாலும் பாடப்பெறும் இசையரங்குகளை அமைத்தல்.
  3. புதிய தமிழ்ப்பாடல்கள் இயற்றுதல்.
  4. அறிய பழைய தமிழ்ப்பாடல்களை கற்ப்பிக்கும் இசைக்கலைர்க்குநன்கொடை அளித்தல்.
  5. அறிய தமிழிசை பாடல்களை திரட்டுதல் .
  6. தமிழிசைப்பாடல்கள் நூல்கள் வெளியிடுதல் .  
போன்ற திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டன . 
வானொலியில் தமிழிசை பாடல்களை பாடுவதன் மூலம் தமிழிசை வளர்ச்சி துரிதமடையும் என அண்ணாமலை அரசர் எண்ணினார் .எனவே திருச்சி வானொலி நிலையத்தில் நடைபெறும் இசை சம்பந்தமான நிகழ்சிகளில் தமிழுக்கு 80 சதவிகிதமும் மற்ற மொழிகளுக்கு 20 சதவிகிதமும் அதுபோல் சென்னை நிலையத்தில் தமிழுக்கு 60 சதவிகிதமும் மற்ற மொழிகளுக்கு 40 சதவிகிதமும் வாய்ப்புகள் வழங்க வேண்டுமாறு வானொலி நிலைய இயக்குனருக்கு கடிதம் எழுதினார்கள்.
மேலும் அண்ணாமலை அரசரின் நிதி உதவியோடு திருச்சி,மதுரை,புதுக்கோட்டை ,ஆத்தங்குடி ,கும்பகோணம் ,திருப்பத்தூர் ,திண்டுக்கல் ,வலம்புரி ஆகிய ஊர்களில் தமிழிசை விழாக்கள் சிறப்பாக நடைபெற்றன .
தமிழ் இசையினை என்றும் வளர்க்கும் நிலையான நிறுவனமாக சென்னை மாநகரில் தமிழ் இசை சங்கத்தை 1943 ஆண்டு நிறுவினார் . இச்சங்கம் தமிழிசை இயக்க செயல்பாடுகளுக்கு தலைமையிடமாக செயல்பட்டு வருகிறது .
இத்தகைய தமிழிசை வளர்சிக்காக பெரும் பங்காற்றிய தமிழிசை தந்தை வள்ளல் அண்ணாமலை செட்டியாரின் பிறந்தநாள் இம்மாதம்  செப்டம்பர் 18 ஆகும் . எனவே அன்றைய நாளில் அவரை நினைத்து அவரது பெருமைகளை பேசுதல் தமிழ் மக்களாகிய நமது கடமையாகும் .